×

1.17 நிமிடத்தில் உரையை நிறைவு செய்த கேரள ஆளுநர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரள சட்டசபை கூட்டத் தொடரில் 1.17 நிமிடத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் உரையை நிறைவு செய்தார். பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அங்கு ஆளும் அரசுக்கு ஒன்றிய அரசு தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போடுவது, மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது என ஆளுநர்கள் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் கேரள அரசுக்கும், மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. இதனிடையே பரபரப்புக்கு மத்தியில் இன்று கேரள சட்டப்பேரவை கூடியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கேரள சட்டப்பேரவை கூடியது. அப்போது ஆளுநர் ஆரிப் முகமது கான் தனது உரையை முழுமையாக வாசிக்கவில்லை. அதாவது 1.17 நிமிடத்தில் தனது உரையை நிறைவு செய்தார். 136 பக்கங்கள் கொண்ட ஆளுநர் உரையின் கடைசி பக்கத்தை மட்டும் படித்துவிட்டு அரசின் கொள்கை திட்டங்களை வேண்டும் என்றே வாசிக்காமல் தவிர்த்துள்ளார்.

ஆளுநரின் செயலால் கேரள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கேரளாவில் அரசு, ஆளுநர் இடையே தொடர்ந்து மோதல் இருந்துவரும் நிலையில் ஆளுநரின் செயலால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதனால் கேரளா ஆளுநர் அளிக்கும் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பார்களா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

The post 1.17 நிமிடத்தில் உரையை நிறைவு செய்த கேரள ஆளுநர்: சட்டமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Kerala ,Governor ,Thiruvananthapuram ,Aarif Mohammed Khan ,Kerala Assembly ,EU government ,Baja ,Kerala Governor ,
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...